.jpg)
தருமபுரி, அக். 27 -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 502 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் இன்று (27.10.2025) நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து சேவை, பட்டா, சிட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சமர்ப்பித்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் மனுக்களை விரைந்து தீர்க்குமாறு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். எனவே ஒவ்வொரு மனுவும் முக்கியத்துவத்துடன் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், விபத்துக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பெற்றோர் விபத்தில் உயிரிழந்த அல்லது நிரந்தர முடக்கம் அடைந்த மாணவர்களுக்கு நிதியுதவியாக 86 மாணவர்களுக்கு வைப்புநிதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 1 தங்கம் மற்றும் 6 வெண்கலப்பதக்கங்கள் வென்றதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் சந்தித்து பாராட்டு பெற்றனர்.
இதுடன், 23.10.2025 அன்று அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று மாணவர்களை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் 6 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நற்சான்றிதழ்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு. சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. கதிரேசன், உதவி ஆணையர் (கலால்) திருமதி நர்மதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதிசந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி தே. சாந்தி, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் செல்வி அம்பிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
